மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (24). இவர் பூம்புகார் அரசு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம், புவனகிரி கச்ச பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா (22).
இவர் மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். ஆகாஷ் வேறொரு பெண்ணுடன் பழகியதால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஆகாஷும், சிந்துஜாவும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பாலக்கரை அருகே பைக்கில் செல்லும் போது, சிந்துஜா ஆகாஷிடம், நீங்கள் பழகும் பெண்ணுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதை ஆகாஷ் ஏற்கவில்லை. இதனால், பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த சிந்துஜா, ஏற்கனவே பாட்டிலில் சிறிதளவு பெட்ரோலை எடுத்து சென்றுள்ளார். ஆகாஷ் மீதுள்ள ஆத்திரத்தில், பைக்கில் சென்றபோது, தன் தலையில் பெட்ரோல் ஊற்றி, தீக்குச்சியை கொளுத்தி, தீக்குளித்தார்.
சிந்துஜா மீது எரிந்த தீ ஆகாஷுக்கும் பரவியது. அப்போது ஆகாஷ் பைக்கை நிறுத்தினார். அப்போது அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து 2 பேரையும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.