திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லையான கொடைரோடு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுரை ரோந்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவில் சந்தேகத்திற்குரிய வகையில் ரோட்டோரத்தில் நின்றிருந்த காரை சோதனையிட்டனர்.
அந்த காரில் பெண் சடலம் இருந்தது. கார் நிறுத்தப்பட்டிருந்த இடம் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வருவதால், கார், சடலத்தை மீட்டு காரில் வந்த 2 இளைஞர்களையும் அம்மையநாயக்கனூர் போலீஸாரிடம் ஒப்படைத்துச் சென்றனர்.
இதையடுத்து அம்மையநாயக்கனூர் போலீஸார், காரில் சடலத்துடன் வந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த அருண் ஸ்டாலின் என்பவரின் மனைவி பிரின்ஸி (27) என்பது தெரியவந்தது.
இவருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த பிரின்ஸி, அவருடன் வேலை பார்த்த ராமநாதபுரம் முதுகுளத்தூரைச் சேர்ந்த திவாகர் (27) உடன் தகாத உறவில் இருந்துள்ளார். திவாகருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்த பிரின்ஸி, திவாகரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் அட்சய திருதியை தனக்கு நகை வாங்கிக் கொடுக்க வேண்டும் என பிரின்ஸி திவாகரை டார்ச்சர் செய்திருக்கிறார்.
இதில் ஏற்பட்ட பிரச்னை குறித்து திவாகர் முதுகுளத்தூரில் உள்ள தன் உறவினர் இந்திரகுமார் (28) உடன் பேசி கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பிறகு திவாகர், பிரின்ஸிக்கு கிஃப்ட் தருவதாக கண்ணை துணியால் கட்டி ஆம்னி காரில் ஏற்றியுள்ளார்.
நகையை தான் கிஃப்டாக கொடுக்கப் போகிறார் என பிரின்ஸி காரில் ஏறியுள்ளார். காரை இந்திரகுமார் ஓட்டி கொண்டிருக்க கண்கள் கட்டப்பட்டிருந்த பிரின்ஸியின் கழுத்தை நைலான் கயிறால் இறுக்கி திவாகர் கொலை செய்துள்ளார்.
பிறகு திவாகரும், இந்திரகுமாரும் சடலத்தை காரிலேயே வைத்துக் கொண்டு முதுகுளத்தூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். அப்போது கொடைரோடு வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டதால் அங்கேயே சடலத்தை புதைத்துவிட்டு செல்லலாம் என இடம் தேடியுள்ளனர். அப்போதுதான் ரோந்து போலீஸாரிடம் சிக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.