கர்நாடக மாநிலம் விஜயாப்புரா பகுதியில் வசித்து வருபவர் 30 வயது மனோஜ் குமார். அதே பகுதியில் வசித்து வந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி 4 மாதம் ஆன நிலையில் மனோஜ் குமார் தன்னுடைய மனைவி மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவருடைய தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊருக்கு சென்றுவிட்டார்.
அப்போது மனோஜ்குமார் மற்றும் ராக்கி இருவரும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு மனோஜ் குமார் மற்றும் ராக்கி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. மனோஜ் குமாரின் தாய் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது இருவரும் வீட்டில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கத்தி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் காவல்துறை இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.