இணைபிரியாத நண்பர்கள் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

38

உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர்கள் மச்சக்காளை மற்றும் பிரபு. மச்சக்காளை டாடா ஏசி ஓட்டுநராகவும், பிரபு ஆட்டோ ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தனர்.

நண்பர்களான இருவரும் நேற்று இரவு செட்டியபட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நோட்டம்பட்டி அருகில் மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த கார், இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மச்சக்காளை, பிரபு என்ற இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். நண்பர்களாக கிராமத்தில் வலம் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் சாலை விபத்தில் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதேர்வுக்குப் படிக்காமல் செல்போனில் அரட்டை… மகளைத் தடியால் அடித்துக் கொலை செய்த தாய்!!
Next article3 வயது மகளைக் கொன்று, உடலுடன் 4 கி.மீ. சுற்றித்திரிந்த இளம்பெண்!!