கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் புதுமணப்பெண் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், இளம்பெண்ணின் கணவரையும், அவரது தாயாரையும் நீதிமன்றம் ரிமாண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் சானோக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பினோய். இவரது மகள் டெல்னா (23). டெல்னாவுக்கும், சனூப் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
சனூப் மற்றும் அவரது தாயார் சோலி இருவரும் திருமணமாகி வீட்டிற்கு வந்த நிலையிலும், மீண்டும் வரதட்சணையாக 80 சவரன் தங்கம் கேட்டு டெல்னாவை மனரீதியாக சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இவர்களது சித்திரவதை தாங்க முடியாமல் டெல்னா தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு டெல்னா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக டெல்னாவை மீட்ட அவரது தந்தை, கோழிக்கோடு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் கண்ணூர் மருத்துவக் கல்லூரியிலும் டெல்னாவை சிகிச்சைக்காக அனுமதித்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி டெல்னா உயிரிழந்தார்.
முன்னதாக, டெல்னா வரதட்சணை என்ற பெயரில் மனரீதியாக சித்ரவதை செய்யப்பட்டதாகவும், அவரது தற்கொலை முயற்சிக்கு அவரது கணவர் குடும்பமே காரணம் என்றும் டெல்னாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த டெல்னாவிடம் குன்னமங்கலம் மாஜிஸ்திரேட் வாக்குமூலத்தையும் பதிவு செய்தார்.
இதையடுத்து சனூப் மற்றும் சோலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர். டெல்னாவின் மரணத்தைத் தொடர்ந்து, டிஎஸ்பி பிரமோத் அறிவுறுத்தலின்படி, வரதட்சணைக் கொடுமை மற்றும் குடும்ப வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ்,
டெல்னாவின் கணவர் சனூப் ஆண்டனி (24) மற்றும் அவரது தாயார் சோலி ஆண்டனி (47) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் இரண்டு வாரங்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.