நீச்சல் கற்றுக்கொடுத்த போது சோகம்.. தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!!

52

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த போது, நீரில் மூழ்கி தந்தை மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் போகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்.

நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், தனது மகள் தமிழ்செல்வியையும் (15), அண்ணன் மகள் புவனாவையும் (13) அழைத்துக் கொண்டு, இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக வீட்டின் அருகே உள்ள குட்டைக்கு அழைத்து சென்று நீச்சல் சொல்லிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வியும், புவனாவும் நீச்சல் பழகிய நிலையில், ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளனர்.

இருவரையும் காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்ற மணிகண்டன் அந்த பகுதியில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டதால் மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகள்களை அழைத்துக் கொண்டு குளிக்க சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகமடைந்த மணிகண்டனின் மனைவி, குட்டைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது கரையில் இவர்களது செருப்புகள் மட்டுமே இருந்ததால், சந்தேகம் அடைந்த அவர், ஊர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் குட்டையின் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கியிருந்த மூன்று பேர் உடல்களையும் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுல்தான்பேட்டை போலீசார்,

பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மூன்று பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Previous articleஇளம் மனைவியைக் கொன்று துண்டு துண்டாக்க முயற்சி தோல்வியடைந்ததால் போலீசில் சிக்கிய கணவன்!!
Next articleஅடுத்த வாரம் கல்யாணம் சொந்தபந்தமெல்லாம் வந்தாச்சு.. காதலனை திருமணம் செய்து காவல் நிலையத்தில் புகாரளித்த கல்லூரி மாணவி!!