தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பயிற்சி பெண் மருத்துவர், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாமக்கல்லின் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரணிதா (32). இவர் கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
அதேசமயம் M.D மேற்படிப்பு இறுதி ஆண்டை முடித்த சரணிதா, 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார்.
திருமணமான சரணிதாவுக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், தனது மனைவிக்கு சரணிதாவின் கணவர் போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்காததால், விடுதியில் வேலை செய்யும் பெண்ணொருவரை செல்போனில் அழைத்து, மனைவியின் அறைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
குறித்த பெண் சரணிதாவின் அறைக்கு சென்று அவரை அழைத்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்து பதில் வராததால், சந்தேகமடைந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கதவை உடைத்து பார்த்தபோது சரணிதா மடிக்கணினி சார்ஜரை பிடித்தபடி இறந்து கிடந்தார்.
உடனடியாக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சரணிதா மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சார்ஜர் Wire-யில் மின்கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.