குழந்தைகள், மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை முயற்சி : வீட்டிலிருந்து துர்நாற்றம்!!

44

மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (38). இவர் அதே பகுதியில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த சகோதரியின் மகளான நந்தினி (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 6 வயதில் அபி, ஒரு வயதில் தர்ஷன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நந்தினி அருகில் உள்ள மாவு மில் ஒன்றில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவர்கள் புதுவீடு கட்டி குடியேறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக இவர்களது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், ஆள அரவமின்றி இருந்துள்ளது. ஆனால் வீட்டில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியதால் அருகாமை வீடுகளில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளே பார்த்துள்ளனர்.

அப்போது 4 பேரும் வீட்டிற்குள் அசைவின்றி படுத்துக் கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காரிமங்கலம் போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நந்தினி, அபி மற்றும் தர்ஷன் ஆகிய மூவரும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவன் இருப்பதைக் கண்ட போலீஸார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய முதல் கட்ட ஆய்வில், வீட்டிற்குள் விஷ பாட்டில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் சிவன் தற்கொலை செய்ய முயற்சித்தாரா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கடன் பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Previous articleEMI தொகை கட்டாததால் ஸ்கூட்டர் பறிமுதல்… வங்கி முன்பு கதறி அழுத இளைஞர்!!
Next articleகாதலை ஏற்காத பெண்ணை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை முயற்சி!!