தமிழக மாவட்டம் தர்மபுரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு, தானும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தர்மபுரியின் மணிக்கட்டியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவன் (38). இவர் தனது மனைவி நந்தினி (28), பிள்ளைகள் அபினேஷ் (6), தர்ஷன் (5) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவன் மயங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகன்கள் வீட்டில் இறந்தும் கிடந்துள்ளனர்.
அவரது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதன் மூலம் அக்கம்பக்கத்தினர் இதனை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சிவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், நந்தினி மற்றும் மகன்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கிய நிலையில், சிவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் சிவன் தன் மனைவி, மகன்களை கொன்றுவிட்டு விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது.