தூங்க விடாமல் அழுது கொண்டே இருந்த 5 மாத குழந்தை… அடித்தே கொன்ற தந்தை!!

25

ஊட்டி அருகே 5 மாத குழந்தையை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம் (31). கூரியர் நிறுவன ஊழியரான இவருக்கு ரம்யா (21) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கேத்தரின் ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது. பிரேம் தினமும் காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி காலை 9 மணிக்கு பிரேம் வேலைக்கு சென்று உள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் குழந்தையின் கன்னம் சிவந்த நிலையில் இருந்தது.

அதோடு நீண்ட நேரமாகியும் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை. இதனால் பயந்து போன ரம்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் சாவில் சந்தேகம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ரம்யா, இது குறித்து ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கடந்த சில நாட்களாக குழந்தையின் அழுகை சத்தத்தை தாங்க முடியாததால் பிரேம் அவ்வப்போது குழந்தையை அடித்து வந்துள்ளார். அதற்கு ரம்யா எதிர்ப்பு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ரம்யா துணி துவைத்துக் கொண்டிருந்த போது, குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்துள்ளார். இதில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் பிரேமை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரேமுக்கு மனநல பாதிப்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் இறப்பை தாங்க முடியாத சோகத்தில் ரம்யா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Previous articleமாநிலத்தில் 3வது இடம்… 497 மதிப்பெண்கள் எடுத்தும் விஜய் விழாவுக்கு அழைக்கப்படாத மாணவி கண்ணீர் மல்க புகார்!!
Next articleரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணம் கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி!!