2 வயது குழந்தையை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த தாய்!!

31

கோவை மாவட்டம் காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ் (31). இவர் மத்தம்பாளையத்தில் சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி (28).

இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டரை வயதில் அஸ்விக்கா என்ற மகள் இருந்தார். சந்தோஷ் நேற்று காலை தோட்டத்துக்கு சென்று விட்டார்.

அப்போது கலாமணி தனது மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் காரமடை போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் வீட்டின் அருகே இருந்த கிணற்றின் ஓரத்தில் கலாமணியின் செருப்பு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அங்கு கலாமணி மற்றும் குழந்தை அஸ்விக்கா ஆகியோர் சடலமாக கிடப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இது குறித்த தகவலின் பேரில் காரமடை போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் பிணமாக கிடந்த கலாமணி, அஸ்விக்கா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டனர். அப்போது கலாமணி தனது மார்போடு சேர்த்து மகள் அஸ்விக்காவை துணியால் இறுக்கமாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் தாய் – மகளின் உடல்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலாமணிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Previous article15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை கொன்றுவிட்டு, நாடகமாடிய நபர் : தற்போது சிக்கவைத்த மொட்டை கடிதம்!!
Next articleதிருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்.. திடீரென மயங்கி விழுந்து இளம்பெண் மர்ம மரணம்!!