தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள புலிக்கரை சென்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (31), இவர் பொக்லைன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் பாலக்கோடு மோட்டார் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் ஆனந்திக்கும் (25) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் கனகராஜ், சில சமயங்களில் அங்கேயே தங்கி விடுவார்.
இந்நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவிற்கு வருமாறு பழனிவேல் தனது மகள் ஆனந்தியை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், பலமுறை போன் செய்தும் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், உறவினர்கள் இருவருடன் சென்னியம்பட்டிக்கு விரைந்துள்ளார். ஆனால் அங்கு ஆனந்தி இல்லாததால் குழந்தைகள் இருவரும் வயதான மாமியாருடன் இருந்தனர்.
ஆனந்தியை பற்றி மாமியாரிடம் கேட்டபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அபினேஷ் (23) அழைத்துச் சென்றதாக கூறினார். சந்தேகமடைந்த பழனிவேல் மதிக்கோன் பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டின் அருகே இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அபினேஷ் என்ற வாலிபர் ஆனந்தியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
உடனே போலீசார் அபினேஷை பிடித்து விசாரித்தனர். அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள எஸ்டேட்டுக்கு போலீசாரை அழைத்துச் சென்றார். அங்குள்ள நாவல் மரத்தில் ஆனந்தி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
அவரது உடலில் காயங்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சலசலப்புக்கு இடையே அபினேஷ் போலீசாரிடம் இருந்து தப்பினார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். சம்பவம் நடந்த நாள் மாலை ஆனந்தி வீட்டுக்குச் சென்ற அபினேஷ், தனது நண்பரிடம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி அவரை உதவிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.
அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆனந்தியின் தந்தை பழனிவேல் மற்றும் உறவினர்கள் ஆனந்தியை கொன்று மரத்தில் பிணமாக தொங்கவிட்டிருக்கலாம். எனவே கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
அறிக்கை கிடைத்ததும் முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். சடலத்தை பெற்றுக்கொண்டதும் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- ஆனந்தி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் கிடந்த இடத்தை அடையாளம் கண்ட இளைஞர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடி வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.