கேரளாவில் 22 வயது பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை வீட்டில் மறைத்து பிரசவத்தின் போது தானே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை இறந்ததாக தெரிகிறது. இதை மறைக்க அந்த பெண் யாருக்கும் தெரியாமல் பிறந்த குழந்தையை காதலனிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் ஆலப்புழா பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் தாமஸ் ஜோசப் (24). இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்துள்ளார். அதே நேரத்தில் கேரளாவை சேர்ந்த டோனா ஜோஜி (22) என்ற பெண்ணும் அங்கு தடய அறிவியல் படித்து வந்துள்ளார். இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பயிற்சிக்காக திருவனந்தபுரம் சென்றிருந்த ஜோஜி, தாமஸ் ஜோசப்புடன் உறவில் கருத்தரித்தார். இதனால் ஜோஜியும் ஜோசப்பும் மன அழுத்தத்தில் இருந்தனர், அவர்கள் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தை வெளிப்படுத்தினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வேதனயடைந்தனர்.
இதனால் கருத்தரிப்பை வெளியுலகுக்கு தெரியாமல் மறைத்துவிட்டனர். ஜோஜி ஒரு கட்டத்தில் கருக்கலைப்பு செய்ய முயன்றதாக தெரிகிறது. இருப்பினும், அதற்குள் நேரம் கடந்துவிட்டது, ஜோஜி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார். இதன் மூலம் தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை குடும்பத்தினருக்கு தெரியாமல் சமாளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி காலை பனவள்ளி ஆனைமுடிச்சிராவில் ஜோஜிக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. ஜோஜி உடனடியாக குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டினார்.
ஆனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. மறுபுறம், குழந்தை அழாததால், அருகில் உள்ள குடும்பத்தினருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியவில்லை. டோனோ ஜோஜியும் மிகுந்த சோர்வால் மயங்கி விழுந்துள்ளார்.
வெகுநேரம் கழித்து கண்விழித்த அவர், அழாததால் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து, காதலர் தாமஸ் ஜோசப்பிடம் குழந்தை பிறந்த செய்தியை கூறி, குழந்தையை வேறு எங்காவது கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். இதற்காக ஜோஜி குழந்தையை பிளாஸ்டிக் கவரில் போட்டு யாருக்கும் தெரியாமல் படிக்கட்டுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார்.
தாமஸ் ஜோசப் தனது நண்பர் அசோக்குடன் (24) ஜோஜியின் வீட்டுக்குச் சென்று குழந்தையை பிளாஸ்டிக் பையில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜோஜிக்கு பயங்கர வயிற்று வலி… அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.
ஜோஜியின் உடல் மாறுதல்களும், அவரது நடத்தையும் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், ‘உன் பெற்றோர் வந்தால்தான் சிகிச்சை அளிக்கப்படும்’ என டாக்டர்கள் கூறியதால், ஜோஜி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தது. போலீசார் அங்கு சென்று ஜோஜியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தாமஸ் ஜோசப்பிடம் குழந்தையை அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் (அம்மா டின்டில் திட்டத்தின் கீழ்) ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டதாக ஜோஜி தெரிவித்தார். ஜோசப்பிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை இறந்துவிட்டதாக கூறி ஆளில்லாத பகுதியில் புதைத்துள்ளார்.
அடுத்தடுத்து வெளியாகும் இந்த திடுக்கிடும் உண்மைகள் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பச்சிளம் குழந்தையை வெறிச்சோடிய பகுதியில் புதைத்துள்ளதால், இது கொலையா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது ஜோசப் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஜோஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்கள் ஜோஜி மற்றும் ஜோசப்பின் பெற்றோருக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.