சென்னை திருவல்லிக்கேணியில், 3-வது கணவரை தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தமனைவியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவல்லிக்கேணி அசதிக்கான் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கூலி வேலை செய்து வந்தார். திருவல்லிக்கேணி காந்திநகர், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (34). இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். நாகம்மாள் ஏற்கெனவே 2 திருமணங்கள் செய்து, கருத்துவேறுபாடு காரணமாக இரு கணவர்களையும் விட்டு பிரிந்திருந்தார்.
மணிவண்ணன் தன்னை விட இளையவராக இருந்த நிலையிலும் நாகம்மாள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தினமும் இரவு வீட்டில் மது அருந்தும் வழக்கம் கொண்டவர்கள் எனத் தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் இருவரும் வீட்டில் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் நாகம்மாள், தான் அணிந்திருந்த தாலிக் கயிற்றை கழற்றி, மணிவண்ணன் கழுத்தை இறுக்கியதில் மணிவண்ணன் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த நாகம்மாள் உடனே அருகே வசிக்கும் தனது சகோதரி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் விரைந்து வந்து மணிவண்ணனை மீட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணிவண்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்து நாகம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.